Friday, February 23, 2018

தெருநாய்


.
நன்றியும், பயமும், கோழைத்தனமும்
அந்நியர்களிடம் எகிறும் குணமும்
போன்ற அத்தனை மனித குணமும் நிறைந்த
தெருநாய்கள் வித்யாசமானவை
அவற்றுக்கு விலை கிடையாது
அவைகளுக்கு பெயரும் கிடையாது
கருப்பு, சிவலை, நொண்டி, சொறி
இப்படியாக சில அடையாளங்கள் மட்டுமே
அவைகளுக்கு வீடென்று ஒன்றும் இல்லை,
காடென்று ஒன்றும் இல்லை.
வளர்ப்பவரை தவிர
வேறு யார் அன்பையும் பெறுவதில்லை
வளர்ப்பு நாய்கள் !!!
தெரு நாய்கள் அப்படி இல்லை...
துப்பறியும் நாய்களிடம் இல்லா விசுவாசம்,
அந்நியர்களைத் துரத்தும் தெருநாய்களிடம் உண்டு.
சில நேர கல்லடிகளைத் தவிர
வளர்ப்பு நாய்களைப் போல் காதல், காம சுதந்திரம்
மனிதன் வளர்க்கும் நாய்க்கும் இல்லை,
ஏன்... மனிதனுக்குமே இல்லை
உங்கள் கட்டிலில் படுத்து,
உங்கள் குளிர் அறையில் உறங்கி,
உங்கள் சோறை உண்ணும்,
வீட்டு நாய்களுக்கு
சர்க்கரை நோயோ, இரத்த அழுத்தமோ,
மாரடைப்போ, தொப்பையோ வரும் போது தான் தெரியும்
தெரு நாய்களின் ஆரோக்கியம்!!

Thursday, January 25, 2018

பத்மவிபூசன் இளையராஜா



நட்சத்திர அந்தஸ்து  உள்ள நாயகர்
கலை தாகம் உள்ள காதலர்
நேத்து தான் சினிமாவுக்குள் வந்த நடிகன்
இன்று தான் படைக்க  வந்த இயக்குனர்
பரிட்சார்த்த கதை சொல்லும்  இயக்குனர்
கலைநோக்கம் மட்டுமே கொண்ட திரைப்படம்
 கிராமிய பாத்திரம்  மட்டுமே ஏற்கும் கலைஞன்
இவற்றுள் எதையும் ஏற்று  செய்யும் சகலகலாவல்லவன்
இப்படி எல்லா நீருக்கும் பாத்திரமைத்து
இசை தந்த ஞானி..
ராகங்களை எங்களுக்கு தெரியாது..
ஆனால், உன் ராகங்களுக்கு எங்களை தெரியவைத்தாய்..

காற்றை ஆள்பவனுக்கு
நாட்டை ஆள்பவர் செய்யும்
இன்னுமொரு ஆலாபனையாய்
இன்று உன் ஞான சிரத்தில்
இன்னொரு மகுடம் சூட்டியிருக்கிறது அரசு.

என்றென்றும் ராஜா வாழ்க





Wednesday, November 8, 2017

விவாகரத்து

கணவன் மனைவியாய் தொடங்கிய நம் இல்லறம்
கசப்பில் கசப்பாகி
உன்னுடன் வாழவே முடியாது என்று தீர்மானித்த கணம்
தேற்ற ஆளில்லாமல் அழுது தீர்த்து
பெற்றோர்களின் உடன்பிறப்புகளின் நட்புகளி்ன்
வாஞ்சைகளால் வருடப்பட்டு...
தனியே வாழப் பழகிய நாளில்...
எனக்கு உன்னோடு வாழ்ந்த இனிய பொழுதுகள்
அவ்வப்போது வந்து நினைவூட்டத் தவறவில்லை..
உனக்கும் அது நிகழ்ந்திருக்கும்..

பூர்வீக உறவுகள் அலுத்துப்போய் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கும்
இனிமைகளை கோர்த்து
துணையின் ஆதரவை தேடிய ஒரு நாளில்

அப்பாவின் சினேகிதனின் மைத்துனரின்
மாமனாரின் தம்பி ஒருவர் வழக்கறிஞராய் இருப்பதனால்
அவர்கள் பலமாதம் பிரயாசப்பட்டு வாங்கி வந்த 
விவாகரத்தை வாங்க வேண்டியதாயிற்று

Tuesday, July 25, 2017



28.7.2017 அன்றைய குங்குமம் வார இதழில் வெளியான எனது கவிதை

Tuesday, December 27, 2016

பிம்பம்

உடல் பெருத்து
கடமைகள் பெருத்து
குடும்பமும் குட்டியுமாய்
ஒப்பனை பொறுப்பற்ற
தோற்றத்தில் தற்போது இருந்தாலும்
என்னோடு வாழக்கிடைக்காத
காதலியின் பிம்பம்
இன்னமும் தேவதையின் அந்தஸ்தை
இழக்கவில்லை..


என் பிம்பம் மற்றும்
உண்மையின் மேலுள்ள அவளின்
அபிப்ராயம் குறித்த கேள்விகளிலேயே
வாழ்நாள் முழுக்க நீள்கிறது என் ஐயம்!

Sunday, September 4, 2016

அன்னை தெரசா..
இனி புனிதர் தெரசா..

இந்த பட்டத்தின் மூலம் இவரது பெயர் இன்னும் பல உள்ளங்களுக்கு சென்றடையலாம்...ஒரு அந்தோணியாரைப் போல், கேரளா அல்போன்சாவை போல், சாய்பாபாவைப் போல் தெய்வத்தன்மை அடையலாம்.

அல்பேனியாவில் பிறந்து ரோமன் கத்தோலிக் துறவியாகி சமூகத்தால் அறுவறுக்கப்பட்ட எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் பீடித்த மனிதர்களை ஆதரவற்ற குழந்தைகளை  முதியவர்களை வாஞ்சையோடு தத்தெடுத்து அருஞ்சேவை செய்தவர். அவரது சேவைக்கு முதலில் விமரசனங்கள் இழிவுகள் இருந்தன. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்.

பின்னாளில் அவர் வாழும் காலத்திலேயே சேவையின் சிறப்பு உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டது உலகம்.

ஆனால் இப்போது அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பது புனிதர் பட்டம்

வாழும் போதும் வாழ்ந்த பிறகும் கல்லறையில் அற்புதம் நிகழ்த்தும் கிறிஸ்தவ துறவிகளை வாடிகன் போப் அங்கீகரித்து வழங்கும் பட்டம்.

சமீபத்தில் ஒரு பாதிரியார் சொன்னார்..
பெருமளவு சேவை செய்த அன்னை தெரசாவுக்கே இந்த பட்டம் கிடையாது. ஏனென்றால் இது அற்புதத்திற்கான பட்டம். சேவைக்கான பட்டமல்ல.

அன்னை தெரசா விசயத்திலும் இந்த பட்டத்தை வழங்கியவர்கள் அவர் சேவையை குறிப்பிட்டு..இதே போல் சேவை செய்யும் பணிக்கு பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த காரணத்தால் அன்னை தெரசாவுக்கு இந்த புனிதர் பட்டத்தை வழங்குகிறோம் என்றால் கூட  பரவாயில்லை.

இந்த உலகத்தில் ஒரு மனிதனால செய்ய முடியாத ஆனால் மனிதனால் சாத்தியப்படக் கூடிய அன்பைப் பொழிந்த அன்னை தெரசாவின் சேவை...இறந்த பின் கல்லறையில் இருந்து கொண்டு ஒரு பெண்ணின் புற்று நோயைக் குணமாக்கினார் என்ற மேஜிக் பேக்கேஜில் அடைக்கப்பட்டுள்ளது.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நமக்கு அவரது சேவை மறந்திருக்காது..

ஆனால் 100 வருடம் கழித்து வரும் மனிதர்களுக்கு அன்னைதெரசாவின் கடவுள் பிம்பம் தாண்டி மனிதநேயம் இரண்டாவது இடத்தில் தாற் நிற்கும் அல்லது தெரியாமலேயே கூட போய்விட வாய்ப்புள்ளது.

மனித சேவையை விட...அற்புதம் மகிமையை கொண்டாடும் கலாச்சாரம் மேலாேங்குமேயானால்..இன்னமும் கடவுளர்கள் உருவாவதை நிறுத்த முடியாது..மனிதர்கள் உருவாவதை வேண்டுமானால் நிறுத்தலாம்